< Back
சினிமா செய்திகள்
வித்தைக்காரன்  சினிமா விமர்சனம்..காமெடியனாக இல்லாமல் நாயகனாக அசத்தினாரா சதீஷ்?
சினிமா செய்திகள்

'வித்தைக்காரன் ' சினிமா விமர்சனம்..காமெடியனாக இல்லாமல் நாயகனாக அசத்தினாரா சதீஷ்?

தினத்தந்தி
|
29 Feb 2024 11:56 AM IST

இயக்குநர் வெங்கி இயக்கத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம்தான் வித்தைக்காரன்.

சென்னை,

இயக்குநர் வெங்கி இயக்கத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் வித்தைக்காரன். இந்த படத்தில் சதீஷ் மேஜிக் கலைஞராக நடித்திருக்கிறார்.

காமெடியனாக இல்லாமல் நாயகானாக அசத்தினாரா சதீஷ்...? வித்தைக்காரன் படம் எப்படி இருக்கிறது..? வாருங்கள் பார்க்கலாம்...

கதைக்களம்;

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த சதீஷ் மேஜிக் கலைஞராக இருக்கிறார். ஏமாற்றுபவனை விட ஏமாறுகிறவன் மீதுதான் தவறு என்று கொள்கையுடன் விலையுயர்ந்த பொருட்களை கடத்துகிறார். கடத்தல் தொழிலில் கொடிக்கட்டி பறந்த மூன்று கடத்தல்காரர்களுக்குள் மோதல் உருவாகி தனித்தனியாக தொழில் செய்கிறார்கள். அவர்களுக்காக பாதுகாப்பு அதிகம் உள்ள இடங்களிலிருந்து கடத்தல் பொருட்களை பிரச்சனையின்றி வெளியே கொண்டு வருவதற்கு உதவுகிறார் சதீஷ்.

ஒரு கட்டத்தில் விமான நிலையத்தில் சிக்கி உள்ள வைரத்தை கடத்த மூன்று குழுவினரும் செல்கிறார்கள். வைரங்கள் அவர்களுக்கு கிடைத்ததா? கடத்தல் கும்பலுடன் சதீஷ் இணைந்து செயல்பட்டதன் நோக்கம் என்ன என்பது மீதி கதை.

திரை விமர்சனம்;

மேஜிக் கலைஞராக சதீஷ் என்ட்ரி கொடுத்ததுமே கதை பரபரக்கிறது. உயிரைப் பணயம் வைத்து வைரம் கடத்தும் காட்சிகளில் பதட்டமே இல்லாமல் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நகைச்சுவை சதீஷாக இல்லாமல் நாயகன் சதீஷாக யதார்த்த நடிப்பால் கதையை தாங்கிப் பிடிக்கவும் உதவி இருக்கிறார்.

நாயகி சிம்ரன் குப்தா கதாபாத்திரத்தை நன்றாக உணர்ந்து நடித்திருக்கிறார். புதுமுகம் என்று சொல்ல முடியாதளவுக்கு அவருடைய இயல்பான நடிப்பு கவர்கிறது.

ஆனந்தராஜ், சுப்ரமணிய சிவா, மதுசூதனன் ஆகியோர் வில்லத்தனத்தில் அவரவர் பாணியில் மிரட்டி உள்ளனர். ஆனந்தராஜ் வரும் இடமெல்லாம் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறது. ஜான்விஜய், சாம்ஸ், ஜப்பான் குமார், பாவெல் நவகீதன், மாரிமுத்து ஆகியோரும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் யுவகார்த்திக் துறைமுகம், விமான நிலையம் என ஒவ்வொரு இடங்களையும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். விபிஆர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையை தொந்தரவு செய்யாமல் இருப்பது ஆறுதல்.

கடத்தல், காமெடி என கமர்ஷியல் பார்முலா கதையை சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குனர் வெங்கி.

'வித்தைக்காரன்' என்ற தலைப்புக்கு வலு சேர்க்கும் காட்சிகளை இன்னும் கூடுதலாக வைத்து இருக்கலாம்.

மேலும் செய்திகள்