விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திரைப்படமான 'கண்ணப்பா' பூஜையுடன் தொடங்கியது..!
|தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திரைப்படமான 'கண்ணப்பா' திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திரைப்படமான 'கண்ணப்பா' திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. நீண்ட நாட்களாக இந்த படத்தின் கதை உருவாக்கும் பணியில் விஷ்ணு மஞ்சு ஈடுபட்ட வந்த நிலையில், இன்று ஸ்ரீ காளஹஸ்தியில் படத்தின் பூஜை நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பான் இந்தியன் படமாக 'கண்ணப்பா' திரைப்படத்தை தயாரிக்க விஷ்ணு மஞ்சு திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை அவா என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் ஃபேக்டரி பேனரின் கீழ் விஷ்ணுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான மோகன்பாபு தயாரிக்கவுள்ளார். ஸ்டார் பிளசில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இந்த படத்தை இயக்குகிறார்.
கிருத்தி சனோனின் சகோதரி நூபுர் சனோன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு மணிசர்மா மற்றும் ஸ்டீபன் தேவசி ஆகியோர் இசையமைக்கின்றனர். பருச்சுரி கோபாலகிருஷ்ணா, புர்ரா சாய் மாதவ் மற்றும் தோட்டா பிரசாத் ஆகியோர் படத்தின் கதையில் பணியாற்றியுள்ளனர்.
கண்ணப்பனின் முக்கியத்துவத்தையும், சிவபெருமான் மீது அவர் கொண்டிருந்த பக்தியையும் இந்த படத்தின் மூலம் சித்தரிக்க விஷ்ணு விரும்புகிறார். மொத்த படப்பிடிப்பையும் ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் 'கண்ணப்பா' படத்தில் நடிப்பார்கள் என்று விஷ்ணு கூறினார். படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.