விஷாலின் லஞ்ச புகார் எதிரொலி: இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம் கொண்டுவந்த மத்திய அரசு...!
|தமிழ் படங்களை இந்தியில் வெளியிட தணிக்கை வாரிய சான்றிதழ் வாங்கும் முறையில் அதிரடி மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், 'மார்க் ஆண்டனி'. இந்த படம் வெளியான சமயம் நடிகர் விஷால் கூறிய புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
'மார்க் ஆண்டனி' படத்தை இந்தியில் வெளியிடுவதற்காக மும்பை தணிக்கை வாரிய அதிகாரிகளுக்கு ரூ.6½ லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாக அவர் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மும்பை சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தியும் வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழ் படங்களை இந்தியில் வெளியிட தணிக்கை வாரிய சான்றிதழ் வாங்கும் முறையில் அதிரடி மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு இதுவரை மும்பையில் மட்டுமே தணிக்கை வாரிய சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி தமிழகத்திலேயே அதனை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே இனி தமிழ் திரைப்படங்களை இந்தியில் திரையிட மும்பை தணிக்கை வாரியத்தை அணுக வேண்டிய அவசியம் இல்லை. இதனை மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கருதுகிறார்கள்.
தமிழ் மொழியுடன் சேர்த்து ஏற்கனவே தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளுக்கு தமிழகத்திலேயே தணிக்கை வாரிய சான்றிதழ் பெற்று கொள்ளும் வசதி இருந்து வந்த நிலையில், தற்போது இந்தி பதிப்புக்கும் இந்த முறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது நடிகர் விஷால் புகாரின் மீதான நடவடிக்கையின் எதிரொலியாகவே பார்க்கப்படுகிறது. இதனால் விஷாலுக்கு, திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் விஷால் தெரிவித்த மோசடி புகார் தொடர்பாக அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணனிடம் சி.பி.ஐ. போலீசார் மும்பையில் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தெரிவித்த புகார்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.