< Back
சினிமா செய்திகள்
விஷால் - லைகா வழக்கு: மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சினிமா செய்திகள்

விஷால் - லைகா வழக்கு: மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
19 Jun 2024 5:36 PM IST

லைகா நிறுவனத்துக்கு எதிராக விஷால் தொடர்ந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'சண்டைக்கோழி 2' திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் வெளியீட்டு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த ஒப்பந்தத்தின்படி 23 கோடியே 21 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்ட நிலையில், அந்த தொகைக்கான 12 சதவீத ஜி.எஸ்.டி தொகையை லைகா நிறுவனம் செலுத்தவில்லை. இந்த ஜி.எஸ்.டி. தொகை மற்றும் அதற்கான அபராதத் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.5.24 கோடி திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனு விசாரணையில் இருந்தபோது இந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையுடன் லைகா நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் இந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிடக் கோரி விஷால் தாக்கல் செய்த மனுவையும் முடித்து வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்