"குரோதம் குருதியாய்... ரணங்கள் ரத்தமாய்" விஷால் 34 படத்தின் டைட்டில் வெளியானது...!
|இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'விஷால் 34' படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.
சென்னை,
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. தாமிரபரணி, பூஜை திரைப்படங்களுக்கு பிறகு விஷால் - ஹரி வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்து உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'விஷால் 34' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என்று நடிகர் விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி டைட்டிலுடன் படத்தின் டீசரும் தற்போது வெளியாகி உள்ளது. 'ரத்னம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
சுமார் 2 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் 'கண்ணீர் செந்நீராக.. குரோதம் குருதியாய்... உக்ரம் உதிரமாய்.. ரணங்கள் ரத்தமாய்..." போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தை 2024ம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.