மில்லியன் இதயங்களை வென்றுள்ளார் வினேஷ் போகத் - யுவன் சங்கர் ராஜா
|இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
வினேஷ் போகத் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்தது என காரணம் கூறப்பட்டு, போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு செய்துள்ளார். அதே சமயம், வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினேஷ் போகத்தை ஆதரித்து வெளியிட்டுள்ள பதிவில் " வினேஷ் போகத் வென்றார்... ஆம்,மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளார். கடினமான நேரங்கள் வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றன. நீங்கள் தனியாக இல்லை. எது வந்தாலும் நாங்கள் அனைவரும் உங்களுடன் நிற்கிறோம் . உறுதியாக இருங்கள்" என்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.