ரூ.100 கோடி வசூலை கடந்த விக்ரமின் 'தங்கலான்'
|விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னை,
தமிழ் சினிமாவில் தனது கடினமான உழைப்பினால் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தது. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.
இப்படம் கோலார் தங்க வயலில் தங்கம் கண்டறியப்படுவது சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்தது. இதில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் விக்ரம், பார்வதி போன்றோரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி நடை போட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது வரை கிட்டத்தட்ட ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த படமானது வருகின்ற 30ம் தேதி வட இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.