இன்று வெளியாகிறது விக்ரமின் 62-வது பட அறிவிப்பு : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...!
|அடுத்தடுத்து பட அறிவிப்புகள் வெளியாவதால் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் கூறுகையில், இது கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று கூறியிருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி 'தங்கலான்' வெளியாக உள்ள நிலையில் டீசர் நவம்பர் 1-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது 62வது திரைப்படம் குறித்த அறிவிப்பை அவரின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் 'சியான் 62' அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'துருவ நட்சத்திரம்' மற்றும் 'தங்கலான்' படங்களின் வெளியீடு குறித்த அறிவிப்புகளை தொடர்ந்து தற்போது 62வது திரைப்படத்தின் அறிவிப்பும் இன்று வெளியாகிறது. அடுத்தடுத்து பட அறிவிப்புகள் வெளியாவதால் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.