'3 டி'யில் விக்ரம் படம்
|பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கும் 61-வது படத்தை 3 டி தொழில் நுட்பத்தில் எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
விக்ரம் நடித்த 'கோப்ரா' படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் ஆகிய 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. துருவ நட்சத்திரம் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ளது. நீண்ட காலமாக முடங்கி இருந்த இந்த படம் ரிலீசுக்கு தயாராகி இருப்பது விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. செப்டம்பரில் திரைக்கு வர உள்ளது.
அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இது விக்ரமுக்கு 61-வது படம். தயாரிப்புக்கு முந்தைய வேலைகள் தொடங்கி உள்ளன. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தை 3 டி தொழில் நுட்பத்தில் எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.19-ம் நூற்றாண்டில் கோலார் தங்க வயலில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து தயாராகிறது.