நடிகர் சூர்யாவின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டது 'விக்ரம்' படக்குழு..!
|நடிகர் சூர்யாவின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை 'விக்ரம்' படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. மேலும், இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவுரவ வேடத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார்.
விக்ரம் திரைப்படத்தை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் 'விக்ரம்' படத்தின் டிரைலர் உலகின் உயரமான கட்டிடமான, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் இன்று இரவு 8.10 மணிக்கு திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்களை குறிப்பிட்டு படக்குழு போஸ்டர்களை வெளியிட்டிருந்தது. அந்த வகையில் தற்போது விக்ரம் படத்தில் சூர்யா நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் பெயர் என்ன என்று ரசிகர்களை கேள்வி கேட்கும் வகையில் சூர்யா இடம்பெற்றுள்ள போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.