வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் விஜய் சம்பளம் ரூ.200 கோடி
|விஜய் நடிக்கும் 'லியோ' படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பும் முடிய இருக்கிறது. அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை வெங்கட்பிரபு டைரக்டு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சொன்ன கதை விஜய்க்கு பிடித்து விட்டதாகவும், இதையடுத்து அதில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
வெங்கட்பிரபு ஏற்கனவே பல வெற்றி படங்களை டைரக்டு செய்துள்ளார். முதல் தடவையாக விஜய் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் விஜய்யின் 'பிகில்' படத்தை தயாரித்து இருந்தது.
வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளம் கொடுக்க பட நிறுவனம் முன்வந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய திரையுலகில் எந்த நடிகரும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதிக சம்பளம் பெறும் முதல் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு கிடைத்துள்ளது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.