முண்டியடித்த ரசிகர்களால் விஜய்யின் கார் கண்ணாடி உடைப்பு - வீடியோ வைரல்
|விஜய்யை காண முண்டியடித்துக்கொண்டு சென்ற ரசிகர்களால் விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது.
திருவனந்தபுரம்,
நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை கேரளாவில் எடுக்க உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.
அதன்படி படப்பிடிப்பிற்காக நேற்று கேரளாவிற்கு நடிகர் விஜய் சென்றார். கடைசியாக விஜய் கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான 'காவலன்' படத்தின் படப்பிடிப்புக்காக 2010-ம் ஆண்டு கேரளா சென்றார். இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க பல மணி நேரம் காத்திருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் அவர் பயணித்த காரை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்றனர். விஜய் ஓட்டல் செல்லும் வரை அவருடன் இணைந்து டூவீலர் மற்றும் கார்களில் சென்றனர்.
ஒரு கட்டத்தில் அவரை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், காரும் சேதமடைந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.