17 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீசாகும் விஜய்யின் 'அழகிய தமிழ் மகன்'
|இயக்குனர் பரதன் இயக்கி கடந்த 2007ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் அழகிய தமிழ் மகன்.
சென்னை,
இயக்குனர் பரதன் இயக்கி கடந்த 2007ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் அழகிய தமிழ் மகன். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இந்தப் படத்தில் விஜய், ஸ்ரேயா, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரண்டு வேடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜய். ஹீரோவிற்கு ஏற்படும் வித்தியாசமான சக்தியால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது.
பணக்கார வீட்டு பெண்ணான ஸ்ரேயாவை அபகரிக்க வில்லன் விஜய் செய்யும் முயற்சிகள் அதை தடுக்க ஹீரோவின் போராட்டம் போன்றவற்றை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படத்தில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் கவனம் பெற்றதால் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில், இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்படம் வருகிற 22-ம் தேதி வெளியாக உள்ளது.