'விஜயகாந்த் அண்ணன் ஒரு சாமி' - நடிகர் விஷால் உருக்கம்
|கேப்டன் விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே மக்கள் அவரை சாமி என்று அழைத்தார்கள் என்று நடிகர் விஷால் கூறினார்.
சென்னை,
தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவரது நினைவிடத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.
அந்த வகையில், நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஷால் கூறியதாவது:-
தமிழ் திரையுலகில் ஒரு மிக சிறந்த நடிகர் விஜயகாந்த். கலையுலகத்தில் மட்டுமல்ல பொதுமக்களிடம் சிறந்த மனிதர் என்று பெயர் வாங்கியவர் விஜயகாந்த். நல்ல அரசியல்வாதி. விஜயகாந்தின் தைரியம், உழைப்பு ஆகியவற்றை முன்னுதாரணமாக வைத்துதான் நடிகர் சங்கத்தில் நாங்கள் செயல்பட ஆரம்பித்தோம்.
விஜயகாந்தின் அலுவலகத்தில் எப்போதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும். எல்லோரையும் சரிசமமாக பார்க்கும் மனிதன் கேப்டன் (விஜயகாந்த்) மட்டும் தான். அவரது மறைவு அன்று நான் இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது. ஒரே ஒரு விஷயம் தான் நான் அவரை பார்த்து சொன்னேன் மன்னித்துவிடு சாமி. நான் அவரது கடைசி நேரத்தில் இருந்திருக்க வேண்டும், ஆனால் என்னால் முடியவில்லை. விஜயகாந்த் குடும்பத்திற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
விஜயகாந்த் அண்ணன் ஒரு சாமி. ஒருவர் மறைந்த பிறகுதான் சாமி என்று அழைப்பார்கள்; ஆனால், கேப்டன் உயிருடன் இருக்கும்போதே மக்கள் அவரை சாமி என்று அழைத்தார்கள். தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். நடிகர் சங்க கட்டடத்தில் விஜயகாந்த் பெயரும் இடம்பெறும். விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி கண்டிப்பாக நடந்திருக்க வேண்டும்; விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 19-ம் தேதி சென்னையில் கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.