விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை
|கேப்டனின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையை பிரேமலதா விஜயகாந்த் நடத்தினார்.
சென்னை,
கடந்த 2015ம் ஆண்டு தமிழில் வெளியான "சகாப்தம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இப்போது "படைத்தலைவன்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ஒன்றில், நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சண்முக பாண்டியன். இந்த திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் என்கின்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது, இது அவர்களுடைய முதல் தயாரிப்பாகும்.
இன்று ஆகஸ்ட் 25ம் தேதி மறைந்த நடிகரும், தேமுதிக முன்னாள் தலைவருமான விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் நிகழ்வு அவரது இல்லத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நல்ல நாளில் தேமுதிகவின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்க உள்ள இந்த புதிய திரைப்படத்திற்கான பூஜையை நடத்தினார். கேப்டனின் ஆசிகளோடு இந்த திரைப்படத்தை துவங்குவதாகவும் பொன்ராம் அறிவித்திருக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் மற்றும் அரசியல் தலைவர் சரத்குமார் நடிக்க உள்ளதாகவும், விரைவில் இந்த திரைப்படத்திற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பொன்ராம், நடிகர் சிவகார்த்திகேயனின் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "ரஜினிமுருகன்" மற்றும் "சீமராஜா" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றவர் ஆவார்.