விஜயகாந்த் மறைவு: நடிகர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
|எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை ஒரு மனிதருக்கு மட்டுமே சொல்ல முடியும், அவர்தான் விஜயகாந்த்.
சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது;
எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை ஒரு மனிதருக்கு மட்டுமே சொல்ல முடியும், அவர்தான் விஜயகாந்த். ஒரு நட்சத்திர அந்தஸ்து வருவதற்கு முன்னர் எவ்வாறு பழகினாரோ அவ்வாறுதான் பெரிய நட்சத்திரமாக மாறிய பின்னரும் என்னிடம் பழகினார். எந்த அளவிற்கு பணிவு உள்ளதோ, அந்த அளவிற்கு நியாயமான கோபமும் அவரிடம் இருக்கும் என்பது விஜயகாந்திடம் எனக்கு பிடித்தது. இந்த குணத்தால்தான் அவர் மக்கள் பணிக்கு வந்தார் என்று நினைக்கின்றேன். நல்ல நண்பருக்கு விடைகொடுத்துவிட்டு செல்கிறேன், என்று கூறினார்.