சமூக வலைத்தளத்தில் விஜய்-அஜித் ரசிகர்கள் மோதல் அர்த்தமற்றது; டைரக்டர் மணிரத்னம்
|சமூக வலைத்தளங்களில் யாரைப்பற்றியும், யாரும் பேசிவிடலாம் என்பதால் பலரும் விஷத்தை மட்டுமே கக்குகிறார்கள் என்று டைரக்டர் மணிரத்னம் கூறினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டரான மணிரத்னம், 'பொன்னியின் செல்வன்' படம் மூலம் மேலும் புகழ் பெற்றார். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'தக்லைப்' படத்தை இயக்கி வருகிறார்.
இந்தநிலையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மணிரத்னம் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினார். அவர் பேசும்போது, "ஒரு படம் டைரக்டு செய்யும்போது, சில காட்சிகள் ரொம்ப வீக்கா இருக்கு என்று நமக்கு தெரிந்துவிடும். ஆனால் எல்லாமே கற்றுக்கொள்வதற்காகத்தான் என்று நினைக்க வேண்டும். ஒரு படத்தில் விட்டதை, அடுத்த படத்தில் நிறைவாக கொடுக்கவேண்டும் என்பதே என் எண்ணம்.
சமூக வலைத்தளங்களில் யாரைப்பற்றியும், யாரும் பேசிவிடலாம் என்பதால் பலரும் விஷத்தை மட்டுமே கக்குகிறார்கள். எதிர்மறையான விஷயங்கள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
தென்மாவட்டங்களில் படத்தின் வசூலை யாரும் பார்ப்பதில்லை, கதையை பற்றிதான் யோசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள் என்று சொல்வதை ஏற்கிறேன். ஆனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தெரு சண்டை போடுவது கஷ்டமாக இருக்கிறது.
அஜித் - விஜய் போன்ற நடிகர்களின் ரசிகர்கள், எனக்கு அஜித்தான் பிடிக்கும்... ஏய் எனக்கு விஜய்தான் பிடிக்கும்... என்று சண்டை போடுவது அர்த்தமற்றது.
சமூக வலைத்தளங்களில் நல்ல கேள்விகளை எழுப்பும் பட்சத்தில் பல நல்லது நடக்கும். அதை பலரும் செய்வதில்லை என்பதுதான் வேதனை'', என்று குறிப்பிட்டார்.