'கேங்ஸ்டராக நடிக்க ஆசை' - நடிகை மாளவிகா மோகனன்
|நடிகை மாளவிகா மோகனன், எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள சினிமாவில் 2013-ம் ஆண்டில் வெளியான "பட்டம் போலெ" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான "பேட்ட" படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் மாளவிகா மோகனன் நடித்தார். மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று சாதனை படைத்த நிலையில் இவருக்கு பிரபலமும் கூடியது.
பின்னர் நடிகர் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்து உள்ளார்.
இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அவர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிலையில், ஒரு ரசிகர் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது உங்கள் கனவு? என்று கேட்டார். அதற்கு மாளவிகா மோகனன்,
"கேங்ஸ்டராக நடிக்க ஆசை! ஒரு பெண் கூலான கேங்ஸ்டராக நடிப்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் இல்லையா? இப்போது நான் ஆக்சன் சீன்களுக்கு பயிற்சி பெற்றிருப்பதால், அந்த பாத்திரத்தில் நடிப்பதை பார்ப்பதற்கு ஜாலியாக இருக்கும்" என்று பதிலளித்துள்ளார்.
மேலும் , பிடித்த நடிகை குறித்த கேள்விக்கு அனுஷ்கா ஷெட்டி மற்றும் சமந்தா என்று மாளவிகா மோகனன் பதிலளித்தார்.