தமிழகத்தில் இந்த சாதனையை படைத்த ஒரே நடிகரான விஜய் - எதில் தெரியுமா?
|'தி கோட்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது.
சென்னை,
லியோவின் வெற்றிக்குப்பிறகு விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் 'தி கோட்'. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'தி கோட்' படம் உலகம் முழுவதும் கடந்த 5ம் தேதி வெளியானது.
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படத்தில் பலர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார்கள். வெளியாகி இரண்டு வாரங்களை கடந்துள்ள 'தி கோட்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 420 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது.
லியோ, 'பொன்னியின் செல்வன் 1' படங்களை அடுத்து 'தி கோட்'தான் தமிழகத்தில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் விஜய் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்த இரண்டு படங்களை கொடுத்த ஒரே நடிகராக விஜய் மாறியுள்ளார்.
இதற்கு முன்பு விஜய் நடித்த 'லியோ' படம் தமிழகத்தில் மட்டும் ரூ.230 கோடியும் உலகம் முழுவதும் ரூ. 620 கோடியும் வசூலித்திருந்தது. இதனையடுத்து, 'தி கோட்' படம் லியோவின் வசூல் சாதனையை முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.