< Back
சினிமா செய்திகள்
விஜய் அரசியலில் இருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் - இயக்குநர் சசிகுமார்
சினிமா செய்திகள்

விஜய் அரசியலில் இருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் - இயக்குநர் சசிகுமார்

தினத்தந்தி
|
13 Sept 2024 2:38 PM IST

விஜய் படம் கைவிடப்பட்டது குறித்த கேள்விக்கு இயக்குநர் சசிகுமார் பதிலளித்துள்ளார்.

சென்னை,

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. சுப்ரமணியபுரத்துக்குப் பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். வெற்றி, தோல்வியென சென்ற அவர் நடிப்பு வாழ்க்கையில் இறுதியாக வெளியான 'அயோத்தி' 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'நந்தன்' திரைப்படம் வரும் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அயோத்தி திரைப்படக் கூட்டணி, 'நந்தன்' படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுருதி பெரியசாமி நாயகியாக நடித்துள்ளார்.இதற்கான புரமோஷன் பணிகளில் சசிகுமார் பங்கேற்று வருகிறார். நடிகர் விஜய்யுடனான படம் குறித்து பேசியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் சசிகுமார் கூறியதாவது: 'ஈசன் படத்துக்குப் பிறகு நான் தளபதி விஜய்யிடம் கதை கூறினேன். அது ஒரு வரலாற்று சம்பந்தப்பட்ட கதை. விஜய்யிக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. அவரே தயாரிப்பாளரையும் காட்டினார். ஆனால், அந்த நேரத்தில் அதன் பட்ஜெட், விஎப்எக்ஸ் எல்லாம் மிகவும் செலவுமிகுந்ததாக இருந்தது. அதனால் அந்தப் படம் கைவிடப்பட்டது. அடுத்த ஒரு படத்தோடு விஜய் ஓய்வு பெறக்கூடாது என நினைக்கிறேன். அரசியலில் இருந்தும் அடிக்கடி படம் நடிக்கலாம். விஜய் சினிமாவில் ஓய்வு பெறமாட்டார் என நான் நினைக்கிறேன்' என்றார்.

மேலும் செய்திகள்