விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாநகரம்' இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
|விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாநகரம்' இந்தி ரீமேக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'மாநகரம்'. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, ராம்தாஸ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
'மாநகரம்' திரைப்படம் இந்தியில் 'மும்பைக்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாஸே, தன்யா மனிக்தலா, ரிது ஹாரூன், சஞ்சய் மிஷ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் 'மும்பைக்கர்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ஜோதி தினேஷ் பாண்டே, ரியா ஷிபு இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சலீல் அம்ருதே மற்றும் ராம் சுரேந்தர் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'மும்பைக்கர்' திரைப்படம் வருகிற ஜூன் 2-ம் தேதி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.