'மனுசி' படத்தின் டிரைலரை வெளியிட்ட விஜய் சேதுபதி
|நடிகர் விஜய் சேதுபதி ’மனுசி’ படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன்,கொடி, அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட படங்களைத் தயாரித்தும் உள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார்.
இப்போது சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் டிரைலர் குறித்தான அப்டேட் வெளியானது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு டிரைலர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை விஜய் சேதுபதி வெளியிடுவார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
அதன்படி, தற்போது விஜய் சேதுபதி 'மனுசி' படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.