< Back
சினிமா செய்திகள்
விஜய்சேதுபதி விலகியதால் முரளிதரன் வாழ்க்கை படத்தில் இந்தி நடிகர்
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி விலகியதால் முரளிதரன் வாழ்க்கை படத்தில் இந்தி நடிகர்

தினத்தந்தி
|
18 April 2023 7:18 AM IST

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். சர்வதேச போட்டிகளில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை புரிந்தவர். அவரது வாழ்க்கை '800' என்ற பெயரில் திரைப்படமாக தயாராக இருப்பதாகவும், முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிப்பார் என்றும் சில வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஈழத்தமிழர் பிரச்சினையில் முரளிதரன் சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும் எனவே அவரது வாழ்க்கை படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்றும் தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன.

இதையடுத்து முரளிதரன் வாழ்க்கை படத்தில் இருந்து விலகுவதாக விஜய்சேதுபதி அறிக்கை வெளியிட்டார். இதனால் பட வேலைகள் முடங்கின. விஜய்சேதுபதிக்கு பதிலாக புதிய நடிகர் தேர்வு நடந்தது.

இந்த நிலையில் முரளிதரன் கதாபாத்திரத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. படத்தில் நடிக்கும் அவரது தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். மஹிமா நம்பியார் மதிமலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நரேன், நாசர், வேலராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள்தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ஸ்ரீபதி டைரக்டு செய்கிறார். இவர் வெங்கட்பிரபு விடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ஏற்கனவே கனிமொழி என்ற படத்தை இயக்கி உள்ளார்.

மேலும் செய்திகள்