கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி?
|கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வாழ்க்கை படத்தில் அவரது வேடத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியல் தலைவர்கள் வாழ்க்கை சினிமா படங்களாக வந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதல்-மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை ஏற்கனவே படங்களாக வெளிவந்துள்ளன. இந்த வரிசையில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வாழ்க்கை கதையும் சினிமா படமாக தயாராக உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது வாழ்க்கையை படமாக்க கட்சியினருக்கு விருப்பம் உள்ளது. ஆனால் அதில் நான் நடிக்கவில்லை" என்றார். இந்த நிலையில் சித்தராமையா வாழ்க்கை படத்தில் அவரது வேடத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்சேதுபதி நடிப்பாரா? என்பது விரைவில் தெரியவரும். சித்தராமையா அரசியலில் சில கட்சிகளில் இணைந்து படிப்படியாக உயர்ந்து இறுதியில் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரியாக ஆட்சி நடத்தியவர். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு சித்தராமையா வாழ்க்கை படத்தை எடுத்து திரைக்கு கொண்டு வந்தால் வெற்றிபெற வாய்ப்பாக அமையும் என்று கட்சியினர் முனைப்பு காட்டி வருகிறார்கள்.