விஜய் கட்சியின் கொள்கை விளக்க பாடல்... ரசிகர்களுக்கு சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட்
|விஜய் அரசியல் கட்சிக்கு தனியாக கொள்கை விளக்க பாடல் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது.
சென்னை,
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். விரைவில் மாநாடு நடத்தி கட்சி கொடி மற்றும் கொள்கைகளை அறிவிக்க இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு பொதுமக்கள், ரசிகர்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே விஜய் அரசியல் கட்சிக்கு தனியாக கொள்கை விளக்க பாடல் தயாராக உள்ளதாகவும் அந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உருவாக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு விஜய் கட்சியின் பிரச்சார பாடல் குறித்த தகவல் ஒன்றை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, 'விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவரது கொள்கைகளை பொறுத்து அவருக்கான ஓட்டு தீர்மானமாகும். விஜய்யின் கட்சிப் பாடலை உருவாக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அதனை முழு மனதுடன் செய்வேன்' என்றார்.
மேலும் அவர் கூறும்போது, "நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடக்க இருக்கும் எனது இசை நிகழ்ச்சியில். இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் இருந்து திறமையான இசைக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையினரும் கலந்து கொள்கிறார்கள்'' என்றார்.