'ஜவான்' படத்தில் கவுரவ வேடத்தில் விஜய்?
|'ஜவான்' படம் குறித்து பேசிய படத்தின் சண்டை பயிற்சியாளர் யானிக் பென், விஜயும், ஷாருக்கானும் ஒரே பிரேமில் ரசிகர்கள் பார்ப்பார்கள் என தெரிவித்தார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'.இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஜவான் படத்தில் விஜய் நடித்துள்ளதாக சண்டை பயிற்சியாளர் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. படத்தில் விஜய் கவுரவ வேடத்தில் நடித்துள்ளதாக நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது.இந்த சூழலில் நேர்காணல் ஒன்றில் ஜவான் படம் குறித்து பேசிய படத்தின் சண்டை பயிற்சியாளர் யானிக் பென், விஜயும், ஷாருக்கானும் ஒரே பிரேமில் ரசிகர்கள் பார்ப்பார்கள் என தெரிவித்தார். பின்னர் சுதாரித்த அவர், தான் விஜய் சேதுபதியை கூறியதாகவும், தளபதி விஜய் நடித்துள்ளாரா என்பது பற்றி உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.