இணையத்தில் கசிந்த விஜய் பட பாடல் வீடியோ
|தற்போது வாரிசு படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்து வைரல் ஆகி வருகிறது.
விஜய் நடிக்கும் வாரிசு படப்பிடிப்பு புகைப்படங்கள் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வந்தன. ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் படப்பிடிப்பை நடத்தியபோது சிலர் அதை திருட்டுத்தனமாக படம்பிடித்து வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
பிறகு பைக்கில் வரும் வில்லனை விஜய் கீழே தள்ளிவிட்டு சண்டையிடும் காட்சி வெளியானது. சமீபத்தில் வாரிசு படப்பிடிப்பில் விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்தனர்.
இந்த நிலையில், தற்போது வாரிசு படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்து வைரல் ஆகி வருகிறது. விஜய்யும், ராஷ்மிகாவும் ஜோடியாக ஆடும் காட்சிகள் வீடியோவில் உள்ளன. ரஞ்சிதமே ரஞ்சிதமே என தொடங்கும் அந்த பாடலை விஜய் பாடி உள்ளதாக கூறப்படுகிறது.
இப்பாடலை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், திருட்டுத்தனமாக அதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் கசிந்து விட்டதாகவும், இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வலைத்தளத்தில் வெளியான வீடியோவை நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.