"நோய் பாதிப்பின் தீவிரம்" நடிகை சமந்தா குறித்து உருக்கமாக பேசிய விஜய் தேவரகொண்டா
|குஷி இசை வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா, பட்ட கஷ்டங்கள் குறித்து விஜய் தேவரகொண்டா உருக்கமாக பேசினார்.
ஐதராபாத்,
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் தயாராகி உள்ள படம், 'குஷி'. ஏனெனில் அவர்கள் இருவருக்குமே, கடந்த சில படங்கள் சரியாகப் போகவில்லை.
ஷிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. குஷி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
விழாவில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், பாடகர்கள் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், அனுராக் குல்கர்னி, சின்மயி, ஹரி சரண், திவ்யா எஸ் மேனன், பத்மஜா ஸ்ரீனிவாசன் மற்றும் ஹரி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் குஷி பட பாடலுக்கு நடனமாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். கவர்ச்சி உடையில் வந்த நடிகை சமந்தாவை, நடிகர் விஜய் தேவரகொண்டா அலேக்காக தூக்கி சுற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விழாவில் விஜய் தேவரகொண்டா, நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார் என்பது குறித்து உருக்கமாக பேசினார் . அப்போது அவர் கூறியதாவது :-
குஷி படத்திற்காக சமந்தா மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவரின் புன்னகையோடு இப்படத்தை தொடங்கினோம். ஒரே கட்டமாக 60 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.
ஜூலை மாதம் சமந்தாவின் உடல்நிலை மோசமானது. அவர் உடல்நிலை சரியில்லை என சொன்னபோது கூட, அவர் அழகா தான் இருக்கிறார், அவருக்கு என்ன பிரச்சனை வந்துவிடும் என நானும் இயக்குனரும் லேசாக எடுத்துக்கொண்டோம்.
பின்னர் தான் அதன் தீவிரம் எங்களுக்கு தெரியவந்தது. ஆரம்பத்தில் அதுகுறித்து சமந்தா எதுவும் பேசவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அவரே தன் உடல்நல பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசினார்.
அவர் மயோசிடிஸ் நோய் பாதிப்பின் தீவிரத்தால் ஒரு கட்டத்தில் எங்களிடம் கூட பேசவில்லை. எங்களை பார்க்கவும் விடவில்லை. அந்த அளவுக்கு கடுமையான வேதனையை அனுபவித்து இருக்கிறார்.
இன்னும் அவர் முழுமையாக குணமடையவில்லை. இங்கிருக்கும் லைட்களால் அவருக்கு தலைவலி ஏற்படும், இருந்தாலும் சிரித்த முகத்தோடு இருக்கிறார் என்றால் அதற்கு உங்கள் மீதுள்ள அன்புதான் காரணம். இதே புன்னகையை செப்டம்பர் 1-ந் தேதியும் நான் பார்க்க விரும்புகிறேன்" என விஜய் தேவரகொண்டா கூறினார்.