சிறந்த நடிகருக்காக நான் வாங்கிய முதல் விருதை ரூ. 25 லட்சத்திற்கு ஏலம் விட்டேன் - விஜய் தேவரகொண்டா
|"விருதுகள் மீது தனக்கு பெரிதாக அட்டாச்மென்ட் இல்லை. என்னுடைய முதல் விருதை நான் ரூ. 25 லட்சத்திற்கு ஏலம் விட்டேன்" எனக் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
சென்னை,
தெலுங்கில் வசூல் சாதனை நிகழ்த்திய அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமான விஜய் தேவரகொண்டாவுக்கு படங்கள் குவிந்து வருகின்றன. தற்போது முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். தமிழில் நோட்டா படத்தில் நடித்துள்ளார். சமந்தாவுடன் நடித்துள்ள குஷி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வந்தது.
கீதா கோவிந்தம்', சர்க்காரு வாரி பட்டா' படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் 'பேமிலி ஸ்டார்'. இந்த படத்தில் 'சீதா ராமம்' புகழ் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்த படத்துக்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். 'பேமிலி ஸ்டார்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகிறது. . சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி உள்ளது.
திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கான அங்கீகாரமாகவே விருதுகள் இருக்கிறது. அப்படியான விருதின் மீது தனக்கு எந்தவிதமான அட்டாச்மென்ட்டும் இல்லை என நடிகர் விஜய் தேவரகொண்டா சொல்லி இருக்கிறார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா யூடியூப் தளம் ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார். அதில், சிறந்த நடிகருக்காக தான் வாங்கிய முதல் விருதை ரூ. 25 லட்சத்திற்கு ஏலம் விட்டதாக அவர் கூறியுள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அந்தப் பேட்டியில் அவர், "சில விருதுகள் அலுவலகத்தில் இருக்கும். சிலவற்றை வீட்டில் அம்மா வைத்திருப்பார். அந்த விருதுகளில் எது என்னுடையது, எது என்னுடைய தம்பியுடையது என்று எனக்குத் தெரியாது. 'அர்ஜூன் ரெட்டி' படத்திற்காக நான் வாங்கிய விருதுகளை அந்தப் படத்தின் இயக்குநர் சந்தீப்பிடம் கூட கொடுத்திருக்கிறேன். முதல் முறையாக சிறந்த நடிகருக்காக பிலிம்பேரில் எனக்குக் கிடைத்த விருதை ஏலம் விட்டோம். அதை ரூ. 25 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார்கள். விருது என்ற பெயரில் வீட்டில் ஒரு கல்லாக இருப்பதை விட அதை ஏலம்விட்டதில் நல்ல பணம் கிடைத்தது. அந்தப் பணத்தைத் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினேன்" என்று கூறியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா தனக்குக் கிடைத்த விருதை ஏலத்தில் விட்டதாக சொன்ன விஷயம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.