இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
|இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா. இவர் மீரா பிளஸ் 2 பயின்று வந்தார். விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலை மீராவின் அறை கதவு வெகுநேரமாக திறக்காததால் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மீராவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மீரா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று மீராவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மீரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.