நயன்தாரா தோளில் தலை சாய்த்து நின்ற விக்னேஷ் சிவன்; வைரலான புகைப்படம்
|சவுதி அரேபியாவில் கார் பந்தய போட்டியை காண சென்ற நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி அதுபற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளது.
ஜெட்டா,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, நீண்டகால காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், இருவர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது என்றும் இருவரும் விவாகரத்து செய்ய போகின்றனர் என்றும் தகவல்கள் கசிந்தன. அதற்கு ஏற்றாற்போல், நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் விக்னேஷ் சிவனின் கணக்கு அன்-பாலோ செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து அதில், 'ம்ம்ம்... ஐயம் லாஸ்ட் (நான் இழந்து விட்டேன்) என்ற வார்த்தைகளையும் வெளியிட்டார். இதனால், ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. சர்வதேச மகளிர் தினத்தில் நயன்தாராவுக்கு, விக்னேஷ் சிவன் நேற்று வாழ்த்துகளை தெரிவித்து, புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருவரும் ஒன்றாக கைகோர்த்தபடி நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 குழந்தைகளுடன் சவுதி அரேபியாவுக்கு சென்று அந்நாட்டில் நடைபெறும் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தய போட்டியை காண சென்றுள்ளனர்.
இதுபற்றி விக்னேஷ் சிவன் வெளியிட்டு உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கார் ஒன்றின் உள்ளே, பின்புற இருக்கையில் நயன்தாரா இரு மகன்களையும் கைகளால் அணைத்தபடி காணப்படுகிறார். குழந்தைகள் இருவரும் வெள்ளை நிற டி-சர்ட்டுகள் மற்றும் மஞ்சள் நிற பேண்ட் அணிந்தபடி காணப்படுகின்றனர்.
அவர் பகிர்ந்த சில புகைப்படங்களில், கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தய போட்டி நடைபெறும் பகுதியை தன்னிடம் உள்ள அதிநவீன கேமிரா உதவியுடன் பதிவு செய்து உள்ளார். அப்போது அவர், காவி நிறத்திலான டி-சர்ட்டும், பேண்ட்டும் அணிந்து காணப்பட்டார். அவரின் அருகே நயன்தாரா கருப்பு வண்ண கோட் மற்றும் பேண்ட் அணிந்து காணப்பட்டார்.
இதேபோன்று, மற்றொரு புகைப்படத்தில் இருவரும் வெயிலுக்கு இதம் தரும் கருப்பு கண்ணாடிகளை அணிந்தபடி, ஒன்றாக கைகோர்த்து இளம் வெயிலை அனுபவித்தபடி நடந்து சென்றனர்.
நயன்தாரா பகிர்ந்த வீடியோ ஒன்றில், விக்னேஷ் சிவனுடன் அவர் பேசும் காட்சிகள் உள்ளன. இருவரும் பால்கனியில் (முகப்பு பகுதியில்) நிற்கின்றனர். அதில், நயன்தாராவின் தோளில் அவர் சிறிது நேரம் தலை சாய்த்து நிற்கும் காட்சிகளும் காணப்பட்டன. இதனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு, விவாகரத்து உள்ளிட்ட அனைத்துவித வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.