'நீங்கள் வேறொரு கிரகத்தில் இருந்து வந்தவர்' - பகத் பாசிலை பாராட்டிய விக்னேஷ் சிவன்
|பகத் பாசில் நடிப்பில் கடந்த 11-ம் தேதி வெளியான படம் 'ஆவேஷம்' .
சென்னை,
மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் பகத் பாசில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து தமிழில் மாமன்னன் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.
தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாளப் படம் 'ஆவேஷம்' . இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு, பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
கடந்த 11-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 8 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ரூ.59 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே மலையாள சினிமா பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. 'பிரம்மயுகம்', 'பிரேமலு', 'மஞ்சுமெல் பாய்ஸ்' படங்களைத் தொடர்ந்து 'ஆவேஷம்' ரூ.50 கோடி பாக்ஸ் ஆபீஸில் நுழைந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'இந்த படத்தை பார்த்து மிகவும் வியப்படைந்தேன். பகத் பாசில்சார் நீங்கள் வேறு கிரகத்தில் இருந்து வந்துள்ளீர்கள். சிறப்பாக எழுதப்பட்டு அற்புதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மலையாள சினிமா, அனைத்தையும் அடித்து நொறுக்குகிறது. இப்படிப்பட்ட படத்தை எடுத்ததற்காக படக்குழுவிற்கும் பகத் பாசில் சாருக்கும் வாழ்த்துகள்'. இவ்வாறு தெரிவித்துள்ளார்.