விதார்த் - வாணி போஜன் நடிப்பில் உருவான "அஞ்சாமை" - பர்ஸ்ட் லுக் வெளியீடு
|பர்ஸ்ட் லுக் போஸ்டரில் 'உயிர்பலி வாங்கிய நீட்’ என்கிற வாசகம் இடம்பெற்றிருப்பது இப்படம் நீட் தேர்வுகளால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார் விதார்த். கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற விதார்த் பல்வேறு துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மணிகண்டன் இயக்கிய குற்றமே தண்டனை , சுரேஷ் சங்கையா இயக்கிய ஒரு கிடாயின் கருணை மனு , ராதா மோகன் இயக்கிய காற்றின் மொழி , நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கிய குரங்கு பொம்மை கடந்த ஆண்டு வெளியான டெவில் உள்ளிட்ட படங்கள் விதார்த்தின் திறமையை வெளிப்படுத்தும் படங்களாக அமைந்தன.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அஞ்சாமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விதார்த், வாணி போஜன் குழந்தைகளுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படமும், இவர்களின் பின்னணியில் நீட் கொடுமையை எடுத்துரைக்கும் செய்தி அடங்கிய செய்தி தாள் தீயில் எரியும் படமும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.