இரண்டு பாகங்களாக வெளியாகிறது வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படம்
|இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் 'விடுதலை' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டாம் பாகத்தில் சில பகுதிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.