< Back
சினிமா செய்திகள்
பிரபல நடிகர் சரத்பாபு கவலைக்கிடம்
சினிமா செய்திகள்

பிரபல நடிகர் சரத்பாபு கவலைக்கிடம்

தினத்தந்தி
|
24 April 2023 3:02 AM IST

பிரபல நடிகர் சரத்பாபு, கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சரத்பாபு (வயது 71). உடல்நலம் குன்றிய சரத்பாபு, பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமான நிலையில் கடந்த 20-ந் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு 'வென்டிலேட்டர்' மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த டாக்டர்கள், இன்னும் கூடுதல் நேரம் கடந்த பின்புதான் முழுமையான தகவலை அளிக்க முடியும் என்றனர்.

தெலுங்கில் அறிமுகம்

சத்யம்பாபு தீட்சிதலு என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் சரத்பாபு, 1973-ம் ஆண்டு 'ராமராஜ்யம்' என்ற தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 1977-ம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய 'பட்டினப்பிரவேசம்' படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரவேசித்தார்.

சுமார் 50 ஆண்டு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் 200-க்கு மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட பாத்திரங்களில் தோன்றியுள்ளார்.

வெற்றிப் படங்கள்

சரத்பாபு தமிழில் ரஜினிகாந்துடன் நடித்த முள்ளும் மலரும், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து, கமல்ஹாசனுடன் நடித்த சலங்கை ஒலி உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

தெலுங்கில் நடித்த முடு முல்ல பந்தம், சீதாகோக சிலுகா, சம்சாரம் ஒக சதரங்கம், அன்னய்யா, ஆபத்பாந்தவடு போன்ற படங்கள் சரத்பாபுவுக்கு பெயர் பெற்று கொடுத்தன.

மேலும் செய்திகள்