திரைத்துறையில் 14 வருடங்கள்.. 'மாநகரம்' பட நடிகரின் பதிவு
|சந்தீப் கிஷன் நடித்த முதல் படமான பிரஸ்தானம் என்ற தெலுங்கு படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளைக் கடக்கிறது.
தெலுங்கில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் 'சந்தீப் கிஷன்'. தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தில் அறிமுகமாகி 'மாநகரம்' படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'மாயவன்', கசடதபற ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தனுஷ் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தில் நடித்திருக்கிறார். தனுஷிற்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிரது. இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் இவர் நடித்த முதல் படமான பிரஸ்தானம் என்ற தெலுங்கு படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளைக் கடக்கிறது. இதன் மூலம் திரைத்துறைக்கு அவர் அறிமுகமாகி 14 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார். இந்த நிலையில் 14 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவரின் எக்ஸ் தள பதிவில், "இந்த 14 வருடங்களாக நண்பர்களாக, குடும்பமாக மற்றும் ரசிகர்களாக என்னுடன் அன்புடனும், வலிமையுடனும் இருந்ததற்கு நன்றி. நான் விழும்போதெல்லாம், நீங்கள் என்னை மீண்டும் மேலே எழச்செய்தீர்கள். நான் உங்களுக்கு என் வாழ்நாளில் கடமைப்பட்டிருக்கிறேன், மற்றும் உங்கள் அனைவரையும் மிகவும் பெருமைப்படுத்துவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.