'கோட்' பட டைரக்டரை அமெரிக்காவில் சந்தித்த விஜய்சேதுபதி
|'கோட்' பட டைரக்டர் வெங்கட்பிரபுவை நடிகர் விஜய்சேதுபதி அமெரிக்காவில் சந்தித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கிய மற்றும் முன்னணி இயக்குநராக பணியாற்றி வருபவர் வெங்கட் பிரபு. சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றவர். இவரது இயக்கத்தில் இறுதியாக கஸ்டடி திரைப்படம் வெளியானது. இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வௌியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிக்கும் தி கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மேலும், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோககன், அஜ்மல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் இருக்க, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஎப்எக்ஸ் பணிகளுக்காக இயக்குநர் வெங்கட் பிரபு அமெரிக்காவில் உள்ளார்.
இந்நிலையில், வெங்கட்பிரபு "மகாராஜா" படக்குழுவினர், விஜய் சேதுபதி மற்றும் டைரக்டர் நித்திலன் சாமிநாதனை நேரில் சந்தித்து படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். அவருடன் எடுத்த செல்பியை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, 'இது லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்திருக்கிறது' என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடிகர் சூரியையும் வெங்கட்பிரபு சந்தித்து இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
'மகாராஜா' திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு திரையிடலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, 'மகாராஜா' படக்குழு அமெரிக்கா சென்றிருக்கிறது. அங்குதான் இவர்களை சந்தித்திருக்கிறார் வெங்கட்பிரபு.