< Back
சினிமா செய்திகள்
விமலின் மா.பொ.சி திரைப்படம் சார் என பெயர் மாற்றம்
சினிமா செய்திகள்

விமலின் 'மா.பொ.சி' திரைப்படம் 'சார்' என பெயர் மாற்றம்

தினத்தந்தி
|
14 Jun 2024 9:17 PM IST

விமல் நடித்துள்ள ‘மா.பொ.சி’ திரைப்படம் ‘சார்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கிறார். படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர். இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் முதல் பார்வைப் போஸ்டர் முன்னதாக வெளியானது.

இந்நிலையில், மா. பொ. சி. படத்தின் தலைப்பு தற்போது "சார்" என மாற்றப்பட்டுள்ளதாக இயக்குநர் போஸ் வெங்கட் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இப்படத்தின் மா.பொ.சி தலைப்பு வெளியானபோது, ம.பொ.சிவஞானத்தின் பேத்தி எழுத்தாளர் பரமேசுவரி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவரது பேஸ்புக் பக்கத்தில், "போஸ் வெங்கட் இயக்கத்தில் மா.பொ.சி என்றொரு போஸ்டரைப் பார்த்தேன். தமிழ் இயக்குநர்களுக்கு ஏன் இந்த கற்பனை வறட்சியென்று நினைத்தேன். தமிழுக்குத் தொண்டாற்றியவர்களை நீங்கள் மதிக்கவே வேண்டாம்; ஆனால் ஏன் இப்படி அவமதிக்கிறீர்கள்? நாடறிந்த ஒரு தலைவரை, எல்லைப் போராட்ட வீரரை, சிலம்புச்செல்வரை அவருடைய பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, அவருடைய கதையில்லையென்று சொல்லலாமா? அவருடைய குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று தெரியாதா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்