வசந்த பாலனின் 'தலைமைச் செயலகம்' சீரிஸ் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வீடியோ வெளியீடு
|திரிஷா தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் 'தலைமைச் செயலகம்' சீரிஸின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட சில ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், வெயில் படத்திற்காக தேசிய விருது வென்றார். கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார். கடந்த வருடம் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இந்த நிலையில் தற்போது வெப் சீரிஸில் இறங்கியுள்ளார். இந்த சீரிஸீன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. திரிஷா தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கிஷோர் மட்டும் செய்தித்தாள் வாசிக்கும் படியான புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.
இந்த சீரிஸிற்கு 'தலைமைச் செயலகம்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராதிகா மற்றும் சரத்குமார் அவர்களது ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த சீரிஸை தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
டீசரில், 'நீதினா என்னன்னு தெரியுமா... செஞ்ச தப்புக்கு தண்டனை வாங்கி தர்ரதா, இல்லை, தப்பே செய்யக் கூடாதுங்குற பயத்த ஏற்படுத்துறதா... எதுவா இருந்தாலும் பாதிக்கப்பட்டவங்க பக்கம் நிக்கிறதுதான் நீதி. அந்த நீதி கிடைக்கிறதுக்காக சில குற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். அந்தக் குற்றங்களுக்குத் தண்டனைக் கூட கிடைக்கலாம். அதன் முடிவு மரணமா கூட இருக்கலாம். எல்லாத்தையும் தாண்டி, தன்னையும் தாண்டி ஒரு தலைவன் தன் மக்கள் மீது வைத்திருக்கிற காதல்தான் நீதி' என்று கிஷோர் பேசும் நீண்ட வசனம் டீசரின் ஆரம்பம் தொடங்கி இறுதி வரை இடம்பெறுகிறது. இதைப் பார்க்கையில் ஒரு அரசியல் கட்சி தலைவன், ஒரு சம்பவத்தின் நீதிக்காக குற்றங்கள் செய்து, அதனால் மரண தண்டனை வரை செல்கிறது. அது என்ன சம்பவம், என்ன குற்றம் அந்தத் தலைவன் செய்தான் என்பது விரிவாக இந்த சீரிஸ் சொல்வது போல் தெரிகிறது.
இந்த சீரிஸ் வருகிற 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.