கீர்த்தி சுரேஷின் முதல் இந்தி படம் அப்டேட் வெளியீடு
|கீர்த்தி சுரேஷின் பாலிவுட் என்ட்ரி பற்றி அவரது ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மும்பை,
கோலிவுட், டோலிவுட், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாகக் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் , 'தெறி' படத்தின் இந்தி ரீமேக் மூலம் முதன்முறையாக இந்தி திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீ, ஜோதி தேஷ்பாண்டே உள்ளிட்டோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவரான வருண் தவானுக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் நிலையில், நடிகை வாமிகா கபி இப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார். இயக்குநர் ஏ.காலீஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி மும்பையில் நடைபெற்ற படத்தின் பூஜை வீடியோவை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். விரைவில் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கீர்த்தி சுரேஷ் தனது சமூகவலைள பதிவில்,
"எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான இந்த படத்திற்கு உங்கள் ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துக்களையும் தாருங்கள். குடும்பம் போன்ற எனது நண்பர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றார்.
இந்நிலையில் தென்னிந்திய ராணியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் பாலிவுட் என்ட்ரிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மற்றொருபுறம் கீர்த்தி சுரேஷின் பாலிவுட் என்ட்ரி பற்றி அவரது ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ரகு தாத்தா படத்தின் டீசர் வெளியானது. அதில் அரசு ஊழியராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் வகையிலும், இந்தி தெரியாது போயா எனக் கூறும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்ற நிலையில், இந்த டீசர் அவரது தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.