வரலட்சுமி நடித்துள்ள 'சபரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
|அறிமுக இயக்குனர் அனில் இயக்கியுள்ள இந்த படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
சென்னை,
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 2012-ம் ஆண்டு வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இதை தொடர்ந்து பாலா இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' படத்தில் நடித்தார். இப்படத்தின் மூலம் வரலட்சுமிக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
தொடர்ந்து சண்டகோழி 2, சர்கார், மாரி 2, வெல்வட் நகரம், இரவின் நிழல், வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் தற்போது 'சபரி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராம், மது நந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் அனில் இயக்கியுள்ள இந்த படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். 'சபரி' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'சபரி' திரைப்படம் வருகிற மே 3-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.