காந்தாரா படத்தின் "வராக ரூபம்" பாடலுக்கு தடை...!
|காந்தாரா' படத்தில் இடம்பெற்றுள்ள ‘வராக ரூபம்' பாடலை திரையரங்கம் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகியது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.
இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து. இதனடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காந்தாரா திரைப்படம் வெளியிடப்பட்டது.
தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், காந்தாராவில் இடம்பெற்றிருந்த சூப்பர்ஹிட் பாடலான வராக ரூபம் கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ்ஜின் நவரசம் பாடலை காப்பி அடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட்டு, தாய்க்குடம் பிரிஜ் இசைக்குழுவின் அனுமதி இல்லாமல் வராக ரூபம் பாடலை திரையரங்கம் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.