தலைவனுக்குத் தொண்டன் கட்டிய தாஜ்மஹால் - கலைஞர் நினைவிடம் குறித்து வைரமுத்து பதிவு
|உருவமாய், ஒலியாய், புதைத்த இடத்தில் கலைஞர் உயிரோடிருக்கிறார் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை,
2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினாவில் ரூ.39 கோடியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சி இன்று இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்து கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
"கலைஞர் நினைவிடம் கண்டு சிலிர்த்தேன். கலைஞரின் கையைப் பிடித்துக்கொண்டே கலைஞர் நினைவிடம் சுற்றிவந்த உணர்வு. இது தந்தைக்குத் தனயன் எழுப்பிய மண்டபமல்ல; தலைவனுக்குத் தொண்டன் கட்டிய தாஜ்மஹால். "இப்படியோர் நினைவிடம் வாய்க்குமென்றால் எத்தனை முறையும் இறக்கலாம்".
கலைஞர் கண்டிருந்தால் கவிதை பாடியிருப்பார். உருவமாய், ஒலியாய், புதைத்த இடத்தில் கலைஞர் உயிரோடிருக்கிறார். உலகத் தரம். நன்றி தளபதி" என்று தெரிவித்து உள்ளார்.