< Back
சினிமா செய்திகள்
முதல் தடவையாக தனுசுடன் நடிக்கும் வடிவேல்?
சினிமா செய்திகள்

முதல் தடவையாக தனுசுடன் நடிக்கும் வடிவேல்?

தினத்தந்தி
|
17 April 2023 2:26 PM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தில் தனுசுடன் இணைந்து நடிக்க வடிவேலுவிடம் படக்குழுவினர் பேசி வருகிறார்கள்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்தவர் வடிவேல். இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்து விட்டார். தனுசுடன் மட்டும் இதுவரை நடிக்கவில்லை. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் 2009-ல் வெளியாகி வெற்றி பெற்ற படிக்காதவன் படத்தில் 'அசால்ட்' ஆறுமுகம் கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்து இருந்தனர்.

படப்பிடிப்பில் பங்கேற்று வடிவேல் சில நாட்கள் நடித்தார். பின்னர் படக்குழுவினருடன் வடிவேலுக்கு சில பிரச்சினைகளில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து வடிவெல் வெளியேறி விட்டார். அவருக்கு பதிலாக விவேக்கை நடிக்க வைத்தனர். விவேக்குக்கு அசால்ட் ஆறுமுகம் கதாபாத்திரம் பெயர் வாங்கி கொடுத்தது.

இப்போதும் விவேக்கின் அசால்ட் ஆறுமுகம் காமெடி காட்சிகளை விரும்பி பார்க்கிறார்கள். இந்த நிலையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தில் தனுசுடன் இணைந்து நடிக்க வடிவேலுவிடம் படக்குழுவினர் பேசி வருகிறார்கள். இந்த படத்தில் வடிவேல் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் சந்திரமுகி 2-ம் பாகத்திலும் வடிவேல் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்