உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் வெங்கல் ராவுக்கு, நடிகர் வடிவேலு ரூ.1 லட்சம் நிதி உதவி
|உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்படும் காமெடி நடிகர் வெங்கல் ராவுக்கு, நடிகர் வடிவேலு ரூ.1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார்.
சென்னை,
தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். கந்தசாமி, தலைநகரம், சீனா தானா 007, எலி உள்ளிட்ட பல படங்களில் வெங்கல் ராவின் காமெடிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. சமீபகாலமாக அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. தற்போது வெங்கல் ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கை கால்கள் செயல் இழந்துள்ளது.
ஒரு கை, ஒரு கால் செயலிழந்து வீட்டில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி சினிமா தொழிலாளர்கள் தனக்கு உதவ வேண்டுமென்று வீடியோ வெளியிட்டு இருந்தார் வெங்கல் ராவ். அதனைத்தொடர்ந்து நடிகர் வெங்கல் ராவின் சிகிச்சைக்கு நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்திருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25 ஆயிரம் நிதி வழங்கி உள்ளார்.
இதையடுத்து வெங்கல் ராவிடம், நடிகர் சங்கம் சார்பில் அதன் துணைத் தலைவர் பூச்சி முருகன் தொடர்பு கொண்டு பேசி மருத்துவ உதவிகளுக்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்யும் என்று உறுதி அளித்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் நடிகர் சங்கம் சார்பில் வெங்கல்ராவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. "கலக்கப்போது யாரு" நடிகர் பாலாவும் வெங்கல்ராவுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு ஒரு லட்சம் ரூபாயை வெங்கல் ராவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். வடிவேலு தன்னுடன் நடித்த நடிகர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய மாட்டார் என நடிகர்களே சிலர் அவர் மீது இதற்கு முன்பு குற்றச்சாட்டை வைத்திருந்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வடிவேலு தற்போது வெங்கல் ராவுக்கு உதவி செய்திருக்கிறார். வெங்கல் ராவுடன் போனில் பேசிய வடிவேலு, அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினாராம்.