'உறியடி' விஜயகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
|அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் 'உறியடி' விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னை,
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'உறியடி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜயகுமார். மேலும் 'உறியடி' படத்தில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்தார். தொடர்ந்து விஜயகுமார் 'உறியடி' திரைப்படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தையும் எடுத்தார். இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
'உறியடி 2' படத்திற்குப் பிறகு, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படத்திற்கு எழுத்தாளராக விஜயகுமார் பணியாற்றினார்.
இந்த நிலையில் விஜயகுமார் அடுத்ததாக இயக்குனர் அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பின் போது படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஜயகுமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த திரைப்படத்துக்கு லீன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ளார். கிருபாகரன் படத்தொகுப்பு செய்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.