'பொன்னியின் செல்வன்' குறித்து நாளை முக்கிய அப்டேட் - படக்குழு வெளியிட்ட அறிவிப்பு
|'பொன்னியின் செல்வன்' குறித்து நாளை மாலை 4 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
கல்கி எழுதிய நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார். இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், 2023-ம் கோடை விடுமுறையில் 'பொன்னியின் செல்வன்-2' ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' குறித்து நாளை மாலை 4 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சிறப்பான தகவல் ஒன்று வெளியாக உள்ளதாகவும், அது என்ன என்பதை யூகிக்க முடிகிறதா? என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். அதே சமயம் முதல் பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னனி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்தின் ஒரிஜினல் சவுண்ட் டிராக் வெளியிடப்படுமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.