< Back
சினிமா செய்திகள்
மோகன்லாலின் எல்360 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
சினிமா செய்திகள்

மோகன்லாலின் 'எல்360' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்

தினத்தந்தி
|
13 Aug 2024 4:12 PM IST

மலையாள நடிகர் மோகன்லாலின் 360-வது படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'நெரு' திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது. இதற்கடுத்து வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல நடிகர் மோகன்லாலின் 360-வது படத்தை, 'சவுதி வெள்ளக்கா' பட இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். 'ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' படங்களை இயக்கியதன் மூலம் இவர் கவனம் பெற்றார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல்360' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 1985-ல் முதன்முதலாக மோகன்லால்- ஷோபனா இணைந்து 'அவிடத்தி போலே இவிடேயும்' என்ற படத்தில் நடித்தார்கள். கடைசியாக 2004-ல் 'மாம்பழக்காலம்' என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது மீண்டும் 56-வது முறையாக இணைந்து நடிக்கிறார்கள். விரைவில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுமென இயக்குனர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், இவர் முதல் முறையாக இயக்கும் 'பரோஸ்' திரைப்படம் 3டி-யில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. காப்புரிமை பிரச்சினை தீரும்வரை படத்தை வெளியிடக் கூடாது என்று அறிவித்துள்ளதால், இப்படம் வருகிற அக்டோபர் மாதம் ஆயுதபூஜை பண்டிகையின் போது வெளியிட திட்டமிட்டுள்ளது.

அந்த படம் தாமதமாக வெளியாவதால், 'எல்360' படத்தின் ரிலீஸ் தேதியும் மாறியுள்ளது. அதன்படி 'எல்360' படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருந்தநிலையில், தற்போது இந்த படம் 2025-ல் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்த இரண்டு படங்களுக்கும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்