முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயப்பிரதாவை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு
|முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ஜெயப்பிரதாவை தேடப்படும் நபராக கோர்ட்டு அறிவித்துள்ளது.
லக்னோ,
பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இதனிடையே, சினிமா துறையிலிருந்து விலகிய ஜெயப்பிரதா 1994ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அதன்பின்னர் ஜெயப்பிரதா மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய ஜெயப்பிரதா 2019ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயப்பிரதா பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார்.
இதனிடையே, அந்த தேர்தலின்போது ஜெயப்பிரதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ராய்ப்பூரில் உள்ள கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜெயப்பிரதா நேரில் ஆஜராக கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஜெயப்பிரதா விசாரணைக்கு ஆஜராகாமல் தாமதித்து வந்தார்.
இந்நிலையில், முன்னாள் எம்.பி. ஜெயப்பிரதாவுக்கு எதிரான தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கு விசாரணை ராய்ப்பூர் கோர்ட்டில் நேற்று நடைபெற்றது. அப்போது, விசாரணைக்கு ஜெயப்பிரதா ஆஜராகாததால் அவரை தேடப்படும் நபராக கோர்ட்டு அறிவித்தது. மேலும், ஜெயப்பிரதாவை கைது செய்து வரும் 6ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டுமென போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.