அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர் சுதாகர்... உடல் நிலை குறித்து தவறான வதந்தி பரப்புவதாக வருத்தம்
|தமிழில் கிழக்கே போகும் ரெயில் படத்தில் அறிமுகமாகி 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் சுதாகர். கோவில் மணி ஓசைதனை கேட்டதாரோ, மாஞ்சோலை கிளிதானோ, பூவரசம்பூ பூத்தாச்சு, மலர்களே நாதஸ்வரங்கள், ஆயிரம் மலர்களே மலருங்கள் போன்ற இனிமையான பாடல்கள் அவர் நடித்த படங்களில் இடம்பெற்றவை.
தமிழ் மற்றும் தெலுங்கில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் சுதாகர் உடல்நிலை குறித்து தெலுங்கு இணையதளங்களில் திடீர் வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார்.
தற்போது 64 வயதாகும் சுதாகர் தந்தையர் தினத்தையொட்டி ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மகனுடன் பங்கேற்று கேக் வெட்டினார். அப்போது அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் மாறிப்போய் இருந்தார்.
பின்னர் சுதாகர் அளித்த பேட்டியில், "பாரதிராஜாவின் அறிமுகத்தால் கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா ஜோடியாக நடித்தேன். எங்கள் ஜோடி அந்த நாட்களில் பெயர் பெற்றது. அதனால் எங்கள் இருவருக்குமே வாய்ப்புகள் கிடைத்தன. பிறகு தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் ஆந்திராவில் வந்து தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்க ஆரம்பித்தேன்.
தமிழ்நாட்டில் எனக்கு இருந்த நிறைய சொத்துகளை விற்று விட்டேன். உடல்நல குறைவால் அவதிப்படுகிறேன். ஆனால் சிலர் நான் மரணம் அடைந்து விட்டதாக தவறான வதந்திகளை பரப்பியபோது மிகவும் வருத்தம் அடைந்தேன்'' என்றார்.